அவள் - அவன் - டைரி
அவளது நாட்குறிப்பிலிருந்து
ஞாயிறு மாலையிலிருந்து அவர் நடத்தை சற்று வினோதமாக இருந்தது. என் தோழிகளுடன் நாள் முழுதும் ஷாப்பிங் போய்விட்டு மாலையில் அவரை மதுரா ஹோட்டலில் டின்னருக்கு சந்திப்பதாகத் தான் ஏற்பாடு. அதற்கு சற்று லேட்டாகச் சென்றதால் தான் அப்படி இருக்கிறாரோ என நினைத்து மன்னிப்பு கேட்டபோது, 'அதெல்லாம் ஒன்றுமில்லை!' என்றார்.
உணவருந்தும்போது, ஏதோ சிந்தனை வயப்பட்டிருந்தார். ஒற்றை வார்த்தைகளில் ஏதோ பேசினார். "சரி வாருங்கள், கடற்கரை சென்று தனிமையில் பேசலாம்" என்றேன். வந்தார். எங்களுக்குள் உரையாடல் எதுவும் நிகழவில்லை! நான் என் தோழிகளுடன் நாள் முழுதும் ஊர் சுற்றியது குறித்து அவருக்கு கோபமோ என்ற நினைப்பில். " என் மேல் ஏதாவது மன வருத்தமா?" என வினவினேன். மறுபடியும், "அதெல்லாம் ஒன்றுமில்லை" என்றார்.
காரில் வீட்டுக்குப் போகும் வழியில் அவரிடம், "நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன்!" என்று தோளில் சாய்ந்து சொன்னதற்கு, புன்னகை பூத்தார். "நானும் கூடத் தான்!" என்று சொல்வார் என எதிர்பார்த்து ஏமாந்தேன்!!! என்னவோ என்னை விட்டு அவர் விலகிச் செல்வது போலத் தோன்றியது. நான் அருகில் இருப்பதையே அவர் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை!
வீடு வந்தவுடன் டிவி பார்க்கத் துவங்கினார். அருகில் இருந்தபோதே அவர் என்னை விட்டு மிகத் தொலைவு சென்று விட்டது போன்ற ஓர் உணர்வு!!! மிகுந்த மன அழுத்தத்துடன் படுக்கையறை சென்றேன். சற்று நேரம் கழித்து அவரும் வந்து அருகில் படுத்துக் கொண்டார்.
இதற்கு மேல் தாக்கு பிடிக்க முடியாது என்ற நிலையில் இருந்த நான், அவருடன் மனம் விட்டுப் பேசி விடுவது என்ற முடிவுக்கு வந்தபோது அவர் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தார்! தூக்கம் வரும் வரை நிறைய அழுதேன்! அவர் தன் மனதில் வேறொருத்தியை நினைத்துக் கொண்டிருப்பதாக உறுதியாகத் தோன்றியது!
என் வாழ்க்கையை தொலைத்து விட்டேன்! விடிவு வரும் என்ற நம்பிக்கையும் இல்லை!!!
*********************************************
அவனது நாட்குறிப்பிலிருந்து
இன்று பெங்களூர் டெஸ்ட் போட்டியில் இந்தியா பாகிஸ்தானிடம் தோற்று விட்டது! என்ன ஒரு கேவலமான தோல்வி!?!
என்றென்றும் அன்புடன்
பாலா
0 மறுமொழிகள்:
Post a Comment